கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி தேநீர், பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்தினார்!
சென்னையில் கொட்டும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், இடி -மின்னல் மற்றும் பலத்தகாற்றுடன் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் போர்க்கால நடவடிக்கையால், தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை யானைகவுனி பகுதியில் கொட்டும் மழைக்கு நடுவே, கால்வாய் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.10.2024) நேரில் ஆய்வு செய்தார். மேலும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் அப்போது கேட்டறிந்தார்.
பேசின் மேம்பாலம் –
இதைத்தொடர்ந்து, சென்னை பேசின் மேம்பாலம் பகுதியில் மழைநீர் அகற்றும்பணி களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தாழ்வானப் பகுதிகளில் சில இடங்களில் தேங்கிநின்ற மழைநீரை விரைந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
புளியந்தோப்பு
இதைத்தொடர்ந்து, சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அங்கு மழைநீர் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த முன்களப் பணியாளர்களான, தூய்மைப் பணி யாளர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், தூய்மைப் பணியாளர்களை அருகில் இருந்த தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் மற்றும் பிஸ்கெட் வாங்கித்தந்து ஊக்கப்படுத்தி உற்சாகமளித்ததுடன், தாமும் அவர்களுடன் இணைந்து தேநீர் அருந்தினார். முதலமைச்சரின் இந்த செயலை முன்களப் பணியாளர் அனைவரும் வியந்து வெகுவாகப் பாராட்டினார்கள். முதலமைச்சர் அளித்துள்ள ஊக்கம் மேலும் தங்களை பணியில் மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஓட்டேரி
இதைத்தொடர்ந்து, சென்னை ஓட்டேரியில், தாழ்வானப் பகுதியில் மழை நீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து கலந்துரையாடி, பணிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட் விநியோகம் செய்து, முன்களப் பணியாளர்களின் பணிகளை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தினார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 21,000 பணியாளர்கள் சுழற்சி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்து வரும் நிலையில், அவர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தியதால் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை JCB இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.