தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது நாளை முதல் (மே 2 ) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில விமர்சனங்கள் எழுந்த நிலையில் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், தலைமை செயலகம், கோர்ட், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம், வழக்கறிஞர் என்று சுற்றுவதும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம்தேதி சுற்றறிக்கை ஒன்றைவெளியிட்டார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல் துறைஉட்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால் காவல் துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடும் நிலை உள்ளது. எனவே, தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார்.
இந்த அறிக்கையில் சில விஷயங்களுக்கு வழக்கறிர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் அறிவழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக, வழக்கறிஞர்களுக்காக அவர்களின் பதிவு எண்ணுடன் கூடிய வழக்கறிஞர்களுக்கான ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன. நடைபாதைகளில் விற்கப்படும் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை வாங்கி சிலர் தவறாக பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், போக்குவரத்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு, குறைபாடான நம்பர் பிளேட் சம்பந்தமானது எனவும், அது ஸ்டிக்கர்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால், சரியான சட்டப்பிரிவை குறிப்பிடும்படியும், வழக்கறிஞர்கள் பற்றி, அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டனர்.
இதேபோல் மருத்துவர்களும் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை காவல் ஆணையருக்கு ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், மருத்துவர்கள் பணி மனித உயிரை காப்பாற்றும் ஒரு இன்றியமையாத பணி ஆகும். அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரிப்பதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும். இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சந்தேகப்படும் மருத்துவர்களை ஐடி கார்டை காட்ட சொல்லலாம். அனைத்து மருத்துவர்களையும் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்பது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகவும், உயிர் காக்கும் உன்னத பணியை தடுப்பதாகவும், மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள். அதனால், அந்த சுற்றறிக்கையை உடனடியாக திருத்தம் செய்து, டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விலக்களித்து, புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதனிடையே இதுபற்றி போலீசார் கூறும் போது, போலீஸ், பிரஸ், வழக்கறிஞர், மருத்துவர், அரசியல் கட்சி என ஸ்டிக்கர் ஒட்டுவதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அண்மை காலமாக இதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வானங்களில் பயணிப்பது நடக்கிறது. குற்றவாளிகள் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி நழுவி விடுகின்றனர்.
இதை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை என்றால் எதிர் காலத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதை தடுக்கும் வகையில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்ட தடை விதித்துள்ளோம் என்று கூறினார்கள். போலிகள் ஊடுருவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் மீது சமரசமற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
எந்த வேலை செய்பர்களும் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டுவது, காவல், வழக்கறிஞர் உட்பட பல்வேறு ஸ்டிக்கர்களை தங்களது வாகனங்களில் ஒட்டி பயணிக்கிறார்கள். இதேபோல் எந்த கட்சி ஆட்சி செய்கிறதோ அந்த கட்சியின் சின்னம், ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு பயணிக்கிறார்கள் போலீஸாரின் வாகன சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. ஆலோசனைகளை வழங்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.