ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்ற சோதனை செய்தனர்.அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் கேரள மாநிலம் லாட்டரி சீட்டு எண்களை வெள்ளைத்தாளில் எழுதி பரிசு விழும் என்று கூறி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரித்த போது அவர்கள் சேலம் மாவட்டம் வலசையூர் சுந்தரராஜன் காலனியை சேர்ந்த பழனிவேல் என்கிற செந்தில்குமார் (47), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த யோகநாதன் (27), சேலம் மாவட்டம் கிச்சிபாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர பாண்டியன் (43), ஈரோடு ஆர்.என். பகுதி சேர்ந்த ரமேஷ் (36), வீரப்பன்சத்திரம் பகுதி சேர்ந்த ராஜன்(60) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 20 கேரளா மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.