திருப்பூர்:திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தற்சார்பு பொருளாதாரம் குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-தற்போது உலகம் வர்த்தக மயமாகிவிட்டது. உலக வர்த்தக அமைப்பில் பெருமுதலாளிகள், தொழில் அதிபர்கள் உள்ளனர். இவர்கள் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, போக்குவரத்து ஆகியவற்றை சேவையாக பார்க்காமல் வர்த்தகம் செய்யும் தொழிலாக்கிவிட்டனர். தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கல் மூலமாக கல்வி, மருத்துவம், சாலை, குடிநீர் போன்றவை தனியார்வசமாகி வருகிறது.கேடுவிளைவிக்கும் அணுஉலை, அனல்மின்நிலையத்தை அரசு வைத்துள்ளது. ஆனால் கேடுவிளைவிக்காத காற்றாலை மின்சாரம், சூரிய ஒளிமின்சாரத்தை தனியாரிடம் கொடுத்துவிட்டனர். ஜி.எஸ்.டி. வரி மூலமாக தொழில்களை இழந்துவிட்டனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உணவு ஏற்றுமதி செய்யப்படும். எங்கள் ஆட்சியில் 5 ஆண்டுகள் வாழ்ந்து பாருங்கள். தற்சார்பு பொருளாதாரத்தை கொடுத்து பெருமையோடு வாழும் வாழ்க்கையை கொடுப்போம்.பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுப்பதால் வறுமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. மக்களை வறுமையில் வைத்துக்கொண்டு இலவசங்களை வழங்குவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் மக்களுக்கு வருமானம் கொடுத்து அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்க முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் அவ்வாறு செய்யவில்லை.கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலங்களில் விரைவில் தோ்தல் வரவிருப்பதே விலை குறைப்புக்கு காரணம். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரமாக உயா்த்த ப்பட்டாலும் ஆச்சரியப்ப டுவதற்கு இல்லை.தமிழகத்தில் 1500 அரசுப்பள்ளிக்கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பள்ளிக்கூடங்களை கட்டிக்கொடுப்பதில் முனைப்பு காட்டுவதில்லை. தமிழகத்தில் கட்டப்படும், கட்டி முடிக்கப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் பெயர் மட்டுமே வைக்கப்படுகிறது. காமராஜ் கல்விக்கூடங்களை திறந்து வைத்தார். தி.மு.க.வினர் மது கூடங்களை திறந்து வைத்தனர். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை தனித்தே போட்டியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.