தாரமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம், தாரமங்கலம் 25-வது வார்டு எம். ஜி. ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சிட்டி பாபு, நெசவு தொழிலாளி. இவருடைய மகன் சபரீஷ் (வயது 17). இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. எஸ்சி. அறிவியல் படித்து வந்தார். இவர் வீட்டில் இருக்கும் போது எப்போதும் செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டு சரியாக படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் பலமுறை கண்டித்தும், கேட்காமல் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சபரீஷின் தாயார் மகன் செல்போனில் கேம் விளையாடியதை பார்த்து செல்போனை எடுத்து சென்று விட்டார். இதனால் கோபித்துக்கொண்டே கல்லூரிக்கு அந்த மாணவர் சென்று உள்ளார். பின்னர் கல்லூரியில் இருந்து மாலையில் வீடு திரும்பிய மாணவர் சபரீஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனிடையே தூக்கில் தொங்கிய மாணவனை மீட்டு அவரது பெற்றோர் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து மாணவரின் தந்தை சிட்டிபாபு தாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
