06 Aug 2023 நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கனகராஜ்.இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் காவல் துறை சீருடையில் மோட்டார் சைக்கிளில்
சென்றுள்ளார். இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து, மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங்கின் செல்போன் எண்ணுக்கு
அனுப்பினார்.இதையடுத்து, மாவட்ட எஸ்.பி அவரை மைக்கில் அழைத்து, தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதன்பேரில், சப் – இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.பி-யைத் தொடர்பு கொண்டபோது, அனைவருக்கும் முன்னுதாரணமாக
போலீஸார் இருக்க வேண்டிய நிலையில், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் நீங்கள் சென்றதை ஏற்க முடியாது.
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக உங்களுக்கு நீங்களே அபராதம் விதித்து, அபராதம்
செலுத்திய ரசீதை காண்பித்து விட்டு பணிக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, சப் – இன்ஸ்பெக்டர் கனகராஜ்
நேற்று முன்தினம் இரவு தனக்கு தானே ரூ.1,000 அபராதம் விதித்து, அதை செலுத்திய ரசீதை மாவட்ட எஸ்.பி-யிடம்
காண்பித்துவிட்டு, நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.