ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களில்
சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அமராவதிபுதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி , ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் CBSE பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர்.KR.பாலசுந்தரி அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
இவ்விழாவிற்கு ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக்குழுமத்தின் கல்வி ஆலோசகர், அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் S.சுப்பையா அவர்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றும்போது, பெண்கள் இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கல்வியே என்றும் பெண்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நன்றாக உழைக்க வேண்டும் என்று கூறினார். பள்ளி, கல்லூரிகளில் சாதனை படைத்த மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும், பெண்கள் இன்று அரசியலில், நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவியாக, சட்டசபைகளிலும் பெண்களுடைய நிலை உயர்ந்திருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் எந்தப் பிரச்சினை வந்தாலும் மனம் உடையாமல் மன உறுதியுடன் அவைகளை எதிர் கொள்ளக்கூடிய மனவலிமையும், ஆற்றலையும், மனப்பக்குவத்தையும் பெறும் போது நிச்சயம் எந்த ஒரு இலக்கையும் பெண்கள் அடைய முடியும் என்று கூறினார். மேலும் பெண்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற துணிச்சல் வேண்டும் அப்போதுதான் அவர்களுடைய உரிமைகளைப் பெற முடியும் என்றும் உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் K. மீனா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போது பெண்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள், சோதனைகள் வந்தாலும் அதனை மனஉறுதியுடன் எதிர்கொண்டு சாதிக்க வேண்டும். அப்போதுதான் சாதனைப் பெண்மணிகளாக வளம்வர முடியும். பெண்மைதான் வாழ்க்கை என பாரதி கூறினார். ஏனென்றால் பெண்களுடைய சக்தி மிகவும் உயர்ந்தது சமூக மாற்றம் என்பது பெண்களால் மட்டுமே முடியும். எத்தனை தடைகள் வந்தாலும் அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து எண்ணிய இலக்கை அடைய பெண்கள் முன்வரவேண்டும். உலக சாதனைப் பட்டியலில் பெண்களுடைய நிலை உயர்ந்து கொண்டே இருப்பதை நினைத்து நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். பெண்கள் ஒவ்வொருவரும் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். மகளிருக்கு உரிய குணம் என்னவென்றால் தான் மட்டுமல்லாமல் தன்னோடு இருப்பவர்கள் அனைவரும் உயர வேண்டும் என நினைப்பவர்கள். ஒவ்வொரு பெண்களுடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு ஆண் உள்ளார் என்பது உண்மை. ஏனன்றால் தான் அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்றவற்றில் சிண்டிகேட், செனட் உறுப்பினர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் திறமையாக செயல்பட்டதற்கு தனது குடும்பத்தினர் மட்டுமின்றி, பேராசிரியர் சுப்பையா போன்றவர்களது உறுதுணையும், வழிகாட்டலும்தான் என்னால் பல்கலைக்கழக துணைவேந்தர் அளவுக்கு உயர்வதற்கு வழிவகுத்தது. எனவே பெண்கள் எப்போதும் கடின உழைப்பிற்கு தயங்கக் கூடாது. தனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி கடுமையாக உழைக்கும்போது தன்னால் தடைகளைத் தாண்டி வெற்றி பெற முடியும் என்று கூறினார். இந்தக் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில் மாணவர்களை எப்படியாவது உயர்த்த வேண்டும், முன்னேற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு மட்டுமே செயல்படும் கல்வியாளர் இந்தக் கல்வி நிறுவனத்திற்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார். எனவே நீங்கள் நிச்சயம் உங்கள் இலக்கை அடைய முடியும் என்று கூறி சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களுடன் தனது உரையை நிறைவு செய்தார்.
மேலும் சர்வதேச மகளிர் தின போட்டியில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் நாசாவில் பயிற்சி பெற்ற CBSE பள்ளி மாணவி M.மெய்யம்மை மற்றும் சர்வதேச சிறந்த ஆராய்ச்சியாளர் விருது பெற்ற பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் A.பிரதிமா போன்றோர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.ரா.சிவகுமார், ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.K.அங்கயற்கண்ணி, ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் துணை முதல்வர் V. மகாலிங்க சுரேஷ் மற்றும் இராஜ ராஜன் CBSE பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி வடிவாம்பாள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக பொறியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் K.செந்தாமரை நன்றியுரை கூற விழா நிறைவு பெற்றது.


மாவட்ட செய்தியாளர் அருள் ஜோதி