வரலாற்றில் இன்று நவம்பர் 25 -1839 –
புயலைக் குறிக்க, சைக்ளோன் என்ற ஆங்கிலச் சொல் உருவாகக் காரணமான ஒரு பேரழிவுப் புயல், கொரிங்கா என்ற துறைமுக நகரைத் தாக்கிய நாள் நவம்பர் 25.
இந்தப் புயலின் பேரழிவுக்குப்பின் மீண்டெழ முடியாத அந்நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமமாக எஞ்சியுள்ளது. காற்றின் வேகம் போன்றவை கணிக்கப்பட்டாத இந்தப் புயலின்போது 40 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்து, கப்பல்களும், படகுகளுமாக சுமார் இருபாதாயிரம் கலங்கள் நகருக்குள் அடித்துவரப்பட்டன. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள வெப்பமண்டலப் புயல்களில், மூன்றாவது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய இந்தப் புயலில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர். 1881இல் வியட்னாமில் 3 லட்சம் பேரை பலிவாங்கிய ஹைஃபோங் சூறாவளியியும் இதற்கிணையாக மூன்றாவது இடத்தில் குறிப்பிடப்படுகிறது. உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்டுள்ள, மிக அதிக உயிர்ப் பலிகொண்ட 10 புயல்கள், சூறாவளிகள் முதலானவற்றில், 7 வங்காள விரிகுடாவில்தான் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாக, 1789இல் கொரிங்காவைத் தாக்கிய ஒரு பெரும் புயலில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியானாலும், மீண்டெழுந்த அந்தத் துறைமுக நகரம், 1839 புயலுக்குப்பின் (தனுஷ்கோடியைப் போன்று!), மறுகட்டுமானம் செய்யப்படாமல் சிறிய கிராமமாக சுருங்கிப்போனது. இப்பகுதியில் ஏற்படும் புயல்களைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ஜர்னல் ஆஃப் த ஆஷியாட்டிக் சொசைட்டிக்கு எழுதியபோதுதான், ஹென்றி பிடிங்டன், சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கினார். ஆங்கிலேய வணிகக் கப்பல் தளபதியாக வங்கத்திற்கு வந்த இவர் அங்கேயே தங்கியதுடன், புயல்களில் சிக்கிய பல கப்பல்களை ஆய்வு செய்து, புயலின் மையப்பகுதி அமைதியாக இருப்பதாகவும், அதன் வெளிப்பகுதி புவியின் தெற்கு அரைக்கோளத்தில் கடிகாரச் சுற்றிலும், வடக்கு அரைக்கோளத்தில் எதிர்ப்புறமாகவும் சுழல்வதைக் கண்டறிந்தார். பாம்பு உடலைச் சுற்றுவதுபோல என்பதைக் குறிக்க சைக்ளோன் என்ற சொல்லை உருவாக்கிய இவர், புயல்களை மாலுமிகள் எதிர்கொள்ள வழிகாட்டும் நூலையும் எழுதினார். வங்கத்தின் நிலவியல் அருங்காட்சியக் காப்பாளராகவும் இருந்த பிடிங்டன், புயலால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகமென்பதால், கல்கத்தாவின் தென்கிழக்குப் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டாமென்று அறிவுறுத்தினாலும், 1858இல் அவர் மறைவுக்குப்பின் அமைக்கப்பட்ட அத்துறைமுகம் 1867இல் ஏற்பட்ட புயலில் அழிந்ததும் குறிப்பிடத்தக்கது.