தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் – தொல்லியல் அருங்காட்சியகத்தில், ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா இன்று (05/08/2023) நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் ஐந்து இடத்தில் மியூசியம் அமைக்கும் பணியில் முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டு, இந்தியாவின் முதல் முதல் சைட் மியூசியத்தினை துவக்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நிகழ்வில் முன்னிலை வகித்தார்.
கடந்த 1876ல் இந்தியாவிலேயே முதல் முதலில் அகழாய்வு நடந்தது. இந்த இடத்தில் அப்போதே அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பணி கடந்த 145 ஆண்டுகளாக தள்ளிப்போய் கொண்டிருந்தது. கடந்த 2020ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ஒன்றிய பட்ஜெட்டில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனால் 145 வருட கனவு நிறைவடைந்தது. முன்னதாக, அடிச்சநல்லுரில் உலகதரத்தில் அமைக்கப்படும் அருங்காட்சியக கட்டுமான பணிகளை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்து,அகழாய்வில் கிடைத்த பொருட்களை பார்வையிட்டார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கிஷோர் குமார் பாசா, இணை இயக்குநர் எஸ்.கே.மஞ்சுல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்சி மண்டல தொல்லியல்துறை இயக்குநர் அருண்ராஜ், கண்காணிப்பாளர் காளிமுத்து, தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ப்ரம்மசக்தி, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.