UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay) மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இது மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அன்றாடம் நடைபெறக்கூடிய மோசடி ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை கூகுள் பே அடையாளம் காண்கிறது.
எனினும் இது எல்லா நேரத்திலும் பயன்படாது. உதாரணமாக ஒரு சில நிகழ்வுகளில் மோசடிக்காரர்கள் உங்களது வங்கி விவரங்களை பெறுவதற்காக ஸ்கிரீன் ஷேரிங் போன்ற ஒரு சில அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். கூகுள் பே பயன்படுத்தி ட்ரான்சாஷன்களை செய்யும் போது இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என யூசர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூகுள் பே-யில் ரீசார்ஜ் செய்ய இனி கட்டணம்!
ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் மூலமாக ஏற்படக்கூடிய ஆபத்துகள் என்னென்ன?
இது போன்ற அப்ளிகேஷன்கள் நமக்கு பணி சூழலில் தொலைதூர உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்கினாலும் இவற்றை இன்ஸ்டால் செய்வதனால் பல நேரத்தில் நாம் ஏமாந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யூஸர்கள் இதனை பயன்படுத்தும் போது அதன் மூலமாக வங்கி விவரங்களை மோசடிக்காரர்கள் பெறுகின்றனர்.
“கூகுள் பே ஒருபோதும் பயனாளர்களை தேர்ட் பார்ட்டி செயலிகளை எந்த ஒரு காரணத்திற்காகவும் பதிவிறக்கம் செய்யவோ, இன்ஸ்டால் செய்யவோ சொல்லாது. ஒருவேளை நீங்கள் கூகுள் பே பயன்படுத்துவதற்கு முன்பு இது போன்ற செயலிகளை ஏற்கனவே டவுன்லோட் செய்திருந்தால் அவற்றை செல்போனில் இருந்து அழிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்,” என்று கூகுள் கூறுகிறது.
“யாரேனும் உங்களிடம் கூகுள் பே ரெப்ரசன்டேட்டிவ் போல பேசி இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய சொல்லி, நீங்கள் அதனை டவுன்லோட் செய்திருந்தால் உடனடியாக அவற்றை அழித்து விடுங்கள். இது குறித்து நீங்கள் கூகுள் பே-ல் புகாரையும் பதிவு செய்யலாம்,” என்றும் கூகுள் கூறுகிறது.
ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்கள் மற்றவர்களின் ஸ்கிரீனில் என்ன நடக்கிறது என்பதை காணவும், அந்த சாதனத்தின் கட்டுப்பாட்டை எடுக்கவும் கூட பயன்படுத்தப்படலாம். எனவே உங்களது அனுமதி இல்லாமல் இது போன்ற அப்ளிகேஷன்களை மோசடிக்காரர்கள் இன்ஸ்டால் செய்யும்படி ஏமாற்றலாம். நீங்கள் UPI பின் நம்பரை என்டர் செய்யும் பொழுது பின் நம்பர் என்ன என்பது மோசடிக்காரர்களுக்கு தெளிவாக தெரிந்து விடும். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். உங்கள் வங்கி விவரங்கள் மற்றும் UPI பின் தெரிந்து கொண்ட அந்த நபர்கள் நிச்சயமாக உங்கள் அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணத்தை திருடி விடுவார்கள்.
எனவே முடிந்தவரை இது போன்ற ஸ்கிரீன் ஷேரிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள். ஒருவேளை உங்களது வேலைக்கு அது அவசியமாக கருதப்பட்டால் நீங்கள் ட்ரான்ஷாக்ஷன்களை செய்யும் பொழுது அந்த அப்ளிகேஷன்களை திறக்க வேண்டாம். ஸ்கிரீன் ஷேரிங் அப்ளிகேஷன்களை மூடிய பிறகு கூகுள் பே செயலியை திறந்து பண பரிவர்த்தனையை செய்யவும்.