தேனி மாவட்ட தொல்லியல் தன்னார்வலர்கள் தமிழக அரசும், மத்திய அரசு தொல்லியல் துறையும் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை…
தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே நுண்கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார் 12,000 ஆண்டுகள் தொடர் வரலாற்று சிறப்பு கொண்ட இப்பகுதியை அகழாய்வு செய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மயிலாடும்பாறை அருகே கிளியன் சட்டி மலை அடிவாரத்தில் மலைச்சாமி விஜயன் என்பவரின் காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மலைச்சாமி என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில்,
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான செல்வம் தலைமையில் பள்ளி மாணவர்கள் பாரதிராஜா, தமிழ் ராஜன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பாய்வில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த சர்ட் வகை கல்லால் செய்யப்பட்ட சுரண்டிகள், அறுப்பான்கள், கூர்முனை கருவிகள், துளைப்பான்கள் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்க கோடளிகள், கலாயுதங்கள் தீட்டுக் கற்கள், அரவை கற்கள், கவண் கற்கள், குறியீடு உள்ள பானை ஓடுகள், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்திலான பானை ஓடுகள், மண் பாத்திரங்கள் வைப்பதற்குரிய பானை தாங்கிகள், முதுமக்கள் தாலியின் உடைந்த பகுதிகள் போன்றவைகளை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வாளர் செல்வம் கூறுகையில் தமிழகத்தில் கடைய கற்காலமே நுண்கற் கருவி காலமாக கருதப்படுகிறது.
பெரிய கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதை தவிர்த்து,
சிறிய சிறிய கற் கருவிகளையும் கற்சில்களையும் கருவிகளாக பயன்படுத்தி வேட்டையாடிய காலம் நுண்கற்காலமாகும்.
நுண்கற்கால மக்கள் பெரும்பாலும் மலை அடிவாரங்களிலும் திறந்தவெளி பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர்.
நுண்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 3000 வரையிலானது எனலாம்.
நுண்கற்கால கருவிகள் அளவில் மிக சிறியவை பழைய கற்காலத்தில் கருவிகள் செய்யும்போது உடைந்த சிறிய துண்டுகளை நுண்கற்காலத்தில் அம்பு முனைகள், சிறு கத்திகள், சுரண்டிகளாக பயன்படுத்தியுள்ளனர்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட கற்கருவிகள் கருங்கல்லால் ஆனது நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி உள்ளனர்.
தடியில் கட்டி இதை ஆயுதமாகவும், பிறவற்றிற்க்கும் பயன்படுத்தியுள்ளனர்.
புதிய கற்காலம் கி.மு.3,000 முதல் கி.மு. 1,000 வரையிலானது.
மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலத்தில் வழுவழுப்பான கருவிகள், கையாலும் சக்கரத்தாளும் செய்யப்பட்ட மண்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர்.
மூல வைகைப் பகுதியில் புதிய கற்கால கருவிகள் கிடைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நுண்கற்காலம், புதிய கற்கால கருவிகளோடு பெருங்கற்கால முதுமக்கள் தாலியும், ரோமானிய ரெளலட் மண்பாண்ட வகைகளும் இங்கு கிடைப்பதால் நுண்கற்கால முதல் வரலாற்று காலம் வரை பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து மக்கள் வசித்த வளமான பகுதியாக இப்பகுதி உள்ளது.
நுண்கற்கால கருவிகளும், புதிய கற்கால கருவிகளும், அரவை கற்களும், பல்வகை மண் ஓடுகளும் இப்பகுதியில் பரவி கிடப்பதால், மக்களின் வசிப்பிடமாகவும் கல் ஆயுதங்கள் மண் சட்டிகள் செய்யும் தொழில் கூடங்களும் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இங்கு கிடைக்கும் மண்ணோடு ஒன்றின் உட்புறத்தில் புள்ளிகளிடப்பட்ட முக்கோண முத்திரை இடப்பட்டு உள்ளது. பானையை உற்பத்தி செய்பவரின் அடையாளமாக இக் குறியீடு இருக்கலாம்.
மேலும், இவ்விடத்திலிருந்து கிழக்கு ஒரு மைல் தொலைவில் கரடி புடவு என்ற தொல் மனித வாழ்விடம் உள்ளது.
அங்கிருக்கும் பிரம்மாண்ட கல் ஒதுக்கில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இவ்விடத்திற்கு மேற்கு புறம் உள்ள வடக்கு கூட்டம் மலைப் பகுதியில் பெருங்கற்கால மக்கள் நினைவுச் சின்னங்களான கல்வட்டம் மற்றும் நெடுங்கல் இருக்கின்றன.
கற்காலம் முதல் தற்காலம் வரை மக்கள் வாழ்ந்து வரும் மூல வைகை ஆற்றங்கரையான இப்பகுதியில் அகழாய்வு செய்தால் பழைய கற்கால கருவிகளும் கிடைத்திட வாய்ப்பு இருக்கிறது.
எனவே, தமிழக அரசும் மத்திய அரசு தொல்லியல் துறையும் இப்பகுதியில் ஆய்வு செய்து மூல வைகை ஆற்றுப் பகுதியின் பழமையை வெளிக்கொணர வேண்டுமாய் கோரிக்கை வைக்கின்றோம் என கூறினார்.