தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை 11 மணி அளவில் மதுரையில் இருந்து கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த காரும் கம்பத்திலிருந்து சின்னமனூருக்கு வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அருகில் இருந்த பொதுமக்கள் சின்னமனூர் காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் காவல்துறை மற்றும் தீயணைப்பு குழுவினர் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில்காரை ஓட்டி வந்த அரவிந்த் என்ற கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் காரில் வந்த தனியார் கல்லூரி பேராசிரியர் சிவானந்தம் (45)பலியான மாணவனின் தாயார் நிஷா (42)மற்றும் இறந்த அரவிந்தனின் தம்பியான ஜெயசுதன் (14) ஆகியோர் படு காயங்களுடன் மீட்கப்பட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மூவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவானந்தன் தனது காரில் மதுரை வந்து அங்கிருந்து கல்லூரி மாணவன் அரவிந்தனை அழைத்துக் கொண்டு தேக்கடிக்கு சுற்றுலா செல்வதற்காக வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தில் பலியான அரவிந்தனின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்


