தோஹா: உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்து உள்ளது. தண்டனை விபரம் இன்னும் வெளியாகவில்லை. சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இந்திய கடற்படையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உட்பட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. அந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய திட்டங்களில் இவர்கள் பங்கு பெற்றனர்.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், இஸ்ரேலுக்கு ஆதரவாக கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இவர்கள் எட்டு பேரும் கடந்த ஆண்டு ஆக., மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களின் ஜாமின் மனு பல்வேறு முறை நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கில் கத்தார் நீதிமன்றம், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
எட்டு பேர் சார்பிலும் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், எட்டு பேரின் மரண தண்டனையை குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தண்டனை விபரம் இன்னும் வெளியாகவில்லை. அவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.