அண்மையில், உத்திர பிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் உள்ள மசூதி தொடர்பான ஆய்வின் போது நடைபெற்ற கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு இஸ்லாமியர்கள் உயிரிழந்ததற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது.
இந்த சம்பவத்திற்கு அந்த மாநிலத்தின் ஆளும் பிஜேபி அரசு, இந்து – முஸ்லிம் சமூகத்தினர் இடையே பிளவை உருவாக்கும் நோக்கத்தில் கலவரங்களை தூண்டுவதாக கூறி அதனை கண்டிக்கும் விதமாக இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை முன்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கட்சிகளின் சிறுபான்மை பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் ஆதில், தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று மத்திய பிஜேபி மற்றும் உத்தரப்பிரதேச மாநில பிஜேபி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஆதில்,
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆறு இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்… என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம்.
இந்த தாக்குதலுக்கு நாட்டின் பிரதமர் மோடி பதில் கூறவில்லை. அதேபோல மணிப்பூரில் தொடர்ந்து தேவாலயங்கள் இடிக்கப்படுவதற்கு பிரதமர் பதில் கூறவில்லை. மாறாக மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைனுடன் இந்துக்களுக்கு ஆதரவாக பேசி வரும் பிரதமர், சொந்த நாட்டில் பிறந்த இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கு குரல் கொடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.. என்று அவர் தெரிவித்தார்.