திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது மற்றும் பொய் வழக்கு பதிவு செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அயிரூர் பகுதியை சேர்ந்த 29 வயதான வாலிபர் ஒருவர் கடந்த ஆண்டு சமூக வலைதளம் மூலம் 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். பின்னர் அந்த சிறுமியை நைசாக பேசி நேரில் வரவழைத்த வாலிபர், மறைவான பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அயிரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசனில் கைதான வாலிபரிடம் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் வாலிபர் மீது இன்ஸ்பெக்டர் ஜெயசனிலுக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயசனில் அந்த வாலிபரை தன்னுடைய குடியிருப்புக்கு அழைத்துசென்றார். பின்னர் அவரை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.50 ஆயிரம் பணம் வேண்டும் என்று கூறி வாலிபரை மிரட்டி அவரிடமிருந்து பணத்தையும் இன்ஸ்பெக்டர் ஜெயசனில் பறித்தார்.
ஆனால் பணத்தை வாங்கிய பின்னரும் அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். இந்த நிலையில் போக்சோ வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் வாலிபர் ஆஜரானார். அப்போது தன்னை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஜெயசனில் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வாலிபர் கூறினார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயசனில் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெயசனில் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையே வர்க்கலா பகுதியைச் சேர்ந்த சில ரிசார்ட் உரிமையாளர்கள் மீதும் இன்ஸ்பெக்டர் ஜெயசனில் பொய் வழக்கு பதிவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து திருவனந்தபுரம் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இவ்வாறாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கிய இன்ஸ்பெக்டர் ஜெயசனிலை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப் உத்தரவிட்டுள்ளார்.
ரவுடிகள் மற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீசார் மற்றும் கிரிமினல் வழக்குகள் உள்ள போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதன்படி போலீசார் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10க்கும் மேற்பட்ட போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். ஜெயசனில் டிஸ்மிஸ் செய்யப்படும் நான்காவது இன்ஸ்பெக்டர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.