கிருஷ்ணகிரி மாவட்டம். ஒசூர் மாநகர பகுதி பாகலூா் ஜிஆர்டி சந்திப்பில் ஒசூா் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறையினர் சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஒசூா் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டிஎஸ்பி பாபு பிரசாத் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரில் நாள்தோறும் இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
மேலும், அரசு சாா்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை தவிா்த்து வருகின்றனா். இதனால் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு ஒசூா் பகுதியில் 271 போ் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். 441 போ் படுகாயம் அடைந்து கை, கால் முறிந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.சாலை விபத்துகளில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் அதன் பிறகு தலைக்கவசத்தை தொடா்ந்து அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்வதை பாா்க்க முடிகிறது. எனவே, சாலை விபத்துகள் நிகழும் முன்பே இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்.இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசுரங்களை வழங்கியதுடன், ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணா்வும், டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் ஏற்கெனவே நிகழ்ந்த விபத்துகளும் காட்டப்பட்டன.இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஓசூர் மாநகர காவல் ஆய்வாளா் சிவக்குமாா் அவர்களுடன் ஓசூர் மாநகர போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளா் சத்யா, வாசுதேவன், பன்னீா்செல்வம், காவலா்கள் சந்திரன், வினோத், போக்குவரத்து வாா்டன் முத்துசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.